சிக்கமகளூரு திருவிழா அடுத்த ஆண்டு ஜனவரி 18-ந் தேதி தொடக்கம்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18-ந் தேதி சிக்கமகளூரு திருவிழா தொடங்க உள்ளதாக மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ் அறிவித்துள்ளார்.

Update: 2022-10-29 19:00 GMT

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு திருவிழா

சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் சிக்கமகளூரு திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது;-

2019-ம் ஆண்டு சிக்கமகளூரு மாவட்டத்தில் சிக்கமகளூரு பண்டிகை என்னும் பெயரில் 4 நாட்கள் கோலாகலமாக திருவிழாக்கள் நடந்தன. அப்பொழுது பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு என ஹெலிகாப்டர் மூலம் சந்திர திருக்கோணமலையை சுற்றி பார்ப்பது, படகு சவாரி, விளையாட்டு போட்டிகள் என அனைத்து பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விளையாட்டு போட்டிகள்

அதேபோல மீண்டும் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 18-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை கடந்த முறையை போல இந்த முறையும் சிக்கமகளூரு திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கென 4 நாட்கள் பொழுது போக்கு அம்சங்கள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், தாலுகா அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அதில் திறம்பட வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியும் மற்றும் பொழுதுபோக்கு என இந்த ஆண்டும் பல்வேறு விதமான விளையாட்டு சாகசங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அரசு தனிப்பட்ட நிதி

அனைத்து அதிகாரிகளும் இதற்கான பணிகளை செய்து நன்றாக நடத்தி முடிக்க வேண்டும். அரசு சார்பாக நடத்தப்படும் இந்த சிக்கமகளூரு திருவிழா நிகழ்ச்சிக்கு அரசு தனிப்பட்ட நிதி ஒதுக்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது அவருடன் சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவி, மாவட்ட கலெக்டர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்