5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் முதல்-மநதிரி சித்தராமையா தீவிர ஆலோசனை

5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா தீவிரமாக ஆலோசனை நடத்தினார். அந்த திட்டங்களின் பயன் நடுத்தர பிரிவினருக்கும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-05-29 23:47 GMT

பெங்களூரு:

பெண்களுக்கு இலவச பயணம்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் கிருஹஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு தலா 200 யூனிட் வரை இலவச மின்சாரம், கிருஹ லட்சமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் (பி.பி.எல்.) ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, பாலிடெக்னிக் படித்ததவர்களுக்கு தலா ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த 5 திட்டங்களும் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் உறுதியளித்தனர். அதேபோல் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். முதலாவது மந்திரிசபை கூட்டத்தில் இந்த 5 திட்டங்களுக்கு நிர்வாக ரீதியிலான ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான உத்தரவுகளும் தனித்தனியாக பிறப்பிக்கப்பட்டன. ஆனால் அந்த திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

ஆழமாக ஆலோசனை

இதனால் பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் அரசை கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டதாக குறை சொல்கின்றன. இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா நிதித்துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். 1½ மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் 5 தேர்தல் உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆழமாக ஆலோசனை நடத்தப்பட்டது. 200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் போன்றவை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் மட்டுமின்றி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கூட்டம் முடிவடைந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வேலை வாய்ப்புகள்

காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார். அவ்வாறு பணத்தை டெபாசிட் செய்தாரா?. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்தார். அவ்வாறு வேலை வாய்ப்புகளை பிரதமர் உருவாக்கினாரா?.

விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பதாக பிரதமர் கூறினார். அந்த பணியை செய்தாரா?. மக்களுக்கு நல்ல நாட்களை ஏற்படுத்தினாரா?. மைசூரு மாவட்டம் மூகூர் அருகே நடந்த சாலை விபத்தில் 10 பேர் இறந்த தகவல் கேட்டு மிகுந்த துக்கம் அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்