இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றவர் சித்தராமையா; பா.ஜனதா விமர்சனம்
இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றவர் சித்தராமையா என்று பா.ஜனதா விமர்சித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக பா.ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சலவாதி நாராயணசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நியாயப்படுத்தினார்
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஆதிதிராவிடர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் மாட்டு இறைச்சியை சாப்பிடுகிறார்கள். அதனால் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்தி இருப்பது சரியல்ல என்று கூறியுள்ளார். சித்தராமையா மாட்டு இறைச்சியை சாப்பிட விரும்பினால் சாப்பிட்டும். ஆனால் அதற்கு அவர் வக்காலத்து வாங்க கூடாது.
இறைச்சி சாப்பிட்டு கோவிலுக்கு சென்றவர் சித்தராமையா. அதை நியாயப்படுத்தினார். சித்தராமையா எப்போதும், பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். குறித்து விமர்சிக்கிறார். மேலும் பா.ஜனதாவுக்கு எதிராக ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை தூண்டி விடுவதும் அவரது வழக்கம். நாடு பெரியது. நாட்டை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும். அதை விடுத்து விஷ விதைகளை விதைக்க கூடாது.
காங்கிரசின் கனவு
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. வருகிற சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆட்சியை பிடிக்க நினைக்கும் காங்கிரசின் கனவு நிறைவேறாது.
இவ்வாறு சலவாதி நாராயணசாமி கூறினார்.