சத்தீஸ்கர்: பாத்திரங்கள் திருட்டு- சந்தேகத்தில் பக்கத்துவீட்டுக்காரர் அடித்துக்கொலை
சத்தீஸ்கரில் வீட்டிலிருந்த பாத்திரங்கள் காணாமல் போனதால், திருடியதாக கூறி பக்கத்துவிட்டுக்காரரை அடித்துக்கொன்ற 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
ஜஷ்பூர்,
சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயது இளைஞன் பாத்திரங்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கன்சபெல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படாகலா கிராமத்தில் வசிக்கும் புதன் ராம், ஜெது ராம், சிமு சாய் மற்றும் ரது ராம் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையின்படி, புதன் ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், உள்ளூர் சந்தையில் இருந்து வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த ரூ. 7,000 மதிப்புள்ள நான்கு பாத்திரங்கள் காணாமல் போனது.
இந்த பாத்திரங்களை அவரது பக்கத்து வீட்டுக்காரரான ரோஹித் ராம் நாக்வன்ஷி திருடியிருக்கக்கூடும் என்று அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து குற்றவாளிகளான நான்கு பேரும் ரோகித் ராம் நகவன்ஷியை அவரை மோட்டார் சைக்கிளில் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று தடியடியால் தாக்கினர். இதனால் அவர் இறந்தார்.
உயிரிழந்தவரின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலிசார் தெரிவித்தனர்.