திருமண வீட்டில் பாஜக பிரமுகரை வெட்டிக்கொன்ற மாவோயிஸ்டுகள் - சத்தீஸ்காரில் பயங்கரம்
திருமண நிகழ்ச்சியில் வைத்து, மாவோயிஸ்டுகள் நீல்கந்த் கேகத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
பிஜாப்பூர்,
சத்தீஸ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அவப்பள்ளி மண்டல பாஜக தலைவராக இருந்தவர் நீல்கந்த் கேகம். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்றார்.
திருமண நிகழ்ச்சியில் அவர் பரபரப்பாக இருந்தபோது திடீரென அங்கு வந்த மாவோயிஸ்டுகள் சிலர் நீல்கந்த் கேகத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த கேகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.