செல்லக்கெரே தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் கார் விபத்தில் சிக்கியது; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
செல்லக்கெரே தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரகுமூர்த்தி சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சிக்கமகளூரு;
ரகுமூர்த்தி எம்.எல்.ஏ.
சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரகுமூர்த்தி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ரகுமூர்த்தி எம்.எல்.ஏ. காரில் பாப்பூர் எனும் கிராமத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் அதே காரில் திரும்பி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். காரை, அவரது டிரைவர் ஓட்டியதாக தெரிகிறது.
கார் விபத்தில் சிக்கியது
பாப்பூர் கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த காரும், ரகுமூர்த்தி எம்.எல்.ஏ. சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்ததும் காரில் இருந்த ஏர்பேக் திறந்ததால் காயமின்றி ரகுமூர்த்தி எம்.எல்.ஏ. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதேபோல் எதிரே காரை ஓட்டி வந்த டிரைவர் லேசான காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொண்டார்.
இதைதொடர்ந்து மற்றொரு காரை வரவழைத்து அதில் ஏறி ரகுமூர்த்தி எம்.எல்.ஏ. சென்றார். இந்த விபத்து குறித்து இரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.