கர்நாடகாவில் நிச்சயம் மாற்றம் வரும்: பிரியங்கா காந்தி பேச்சு
கர்நாடகாவில் மூன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அவர்களால் தங்களது முகங்களை வெளியே காட்டவோ, உங்கள் முன் பேசவோ முடியவில்லை என தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிர பணியாற்றி வருகின்றன.
கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசாரம், பேரணி, கட்சி பொது கூட்டம் போன்றவற்றிலும் கலந்து கொண்டு வருகின்றன. தேர்தலில் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர பிரசாரகர்களும் கலந்து கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி இன்று பேசினார். அவர் பேசும்போது, பிரதமர் மோடி, மந்திரிகள் மற்றும் பா.ஜ.க. தலைவர்களுக்கு நான் சவால் விடுகிறேன்.
அவர்கள் குறைந்தது ஒரு தேர்தலில், எந்த மாநிலத்திலாவது மக்களின் மற்றும் அவர்களின் பிரச்சனைகளை பற்றி பேசி வாக்கு கேட்கட்டும். இதுவரை அவர்கள் கடந்த காலத்தில் பேசியிராத விசயங்களை பற்றி பேசி தேர்தலில் போட்டியிடட்டும் என்று கூறியுள்ளார்.
பொதுமக்களின் பிரச்சனைகளாக பணவீக்கம், வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை உள்ளன. கர்நாடகாவில் அவர்கள் மூன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார்கள். ஆனால், அவர்களால் தங்களது முகங்களை வெளியே காட்டுவதற்கான திறனோ அல்லது உங்கள் முன் பேசவோ முடியவில்லை. அதனால், கர்நாடகாவில் நிச்சயம் மாற்றம் வரும் என்று அவர் பேசியுள்ளார்.