கர்நாடகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2023-03-17 18:45 GMT

பெங்களூரு:

வெப்பத்தின் தாக்கம்

கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. இரவில் குளிரின் தாக்கம் இருந்த போதிலும், பகலில் வெயில் வாட்டி வதைத்தது. பிப்ரவரி மாதத்திலேயே கோடையை போல் வெப்பம் இருந்தது. இது அனைவருக்கும் சற்று ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தியது. மார்ச் மாதம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. தலைநகர் பெங்களூருவில் தினசரி வெயில் அளவு 90 டிகிரியை தாண்டியது. பிற மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை நெருங்கியது.

இந்த நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. பெங்களூருவிலும் வெயில் குறைந்து காணப்பட்டது. பெங்களூருவில் நேற்று காலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தூரல் விழுந்தது. அதன் பிறகு வெப்பம் அதிகரித்தது. மதிய நேரத்திற்கு பிறகு வழக்கமான வெயில் காணப்பட்டது.

வளர்ச்சி திட்டங்கள்

இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒருவேளை மழை பெய்தால், கோடை வெப்பம் தணியும். பொதுவாக பெங்களூருவில் கோடையிலும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்படும். ஆனால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. அதனால் அடுத்து வரவுள்ள ஏப்ரல்-மே மாதங்களில் வரலாறு காணாத வெயிலின் தாக்கம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மெட்ரோ உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களால் மரங்கள் வெட்டப்பட்டது தான் வெப்பம் அதிகரிப்புக்கு காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் சொல்கிறார்கள். பெங்களூருவில் பழைய பசுமை சூழ்நிலை மீட்டெடுக்கும் முயற்சியாக மாநகராட்சி நிர்வாகம் தற்போது வளர்ச்சி ஏற்படுத்திய நடைபாதைகளில் குழி தோண்டி மரக்கன்றுகளை நட்டு, அவற்றுக்கு மூங்கில் கவச பாதுகாப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூருவின் பசுமை பகுதி மீண்டும் அதிகரிக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்