கர்நாடகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

‘மோக்கா’ புயல் எதிரொலியாக கர்நாடகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-05-11 21:12 GMT

பெங்களூரு:-

'மோக்கா' புயல் எச்சரிக்கை

வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக் கொண்டுள்ள 'மோக்கா' புயல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்து வருகிற 14-ந்தேதி காலை அந்த புயல் வங்கதேசத்தில் உள்ள காக்ஸ்பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடப்பதற்கு முன்பு அதிதீவிர புயல் சற்று வலு குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக நிபுணர்கள் கணித்து உள்ளனர். கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை துறை எச்சரித்து உள்ளது.

3 நாட்கள் கனமழை பெய்யும்

இந்த நிலையில், 'மோக்கா' புயல் காரணமாக கர்நாடகத்தில் அடுத்த 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரியவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வங்கக்கடலில் புதிதாக உருவாகி உள்ள 'மோக்கா' புயலின் தாக்கம் கர்நாடகத்திலும் இருக்கும். இதனால் பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந்தேதி வரை அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும். அடுத்த 3 நாட்களும் தென் மாவட்டம், வடமாவட்டம், கடலோர மாவட்டங்களிலும், மைசூரு, சிக்கமகளூரு, குடகு, சிக்கமகளூரு, ஹாசன், ராமநகர், சாம்ராஜ்நகர் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பெங்களூரு...

பெங்களூருவை பொறுத்தவரை 3 நாட்களும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் கனமழை பெய்யும். 13-ந்தேதி (நாளை) பெங்களூருவில் அதிக கனமழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்