மும்பையில் ராஜ்நாத் சிங் தலைமையில் விழா அதிநவீன 'மர்மகோவா' போர்க்கப்பல் கடற்படையில் நாளை சேர்ப்பு

மும்பையில் நாளை நடக்கிற விழாவில், அதிநவீன மர்மகோவா போர்க்கப்பலை இந்தியக் கடற்படையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சேர்க்கிறார்.

Update: 2022-12-17 00:15 GMT

புதுடெல்லி, டிச.17-

மும்பையில் நாளை நடக்கிற விழாவில், அதிநவீன மர்மகோவா போர்க்கப்பலை இந்தியக் கடற்படையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சேர்க்கிறார்.

அதிநவீன நாசகார போர்க்கப்பல்

இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். மர்மகோவா என்ற அதிநவீன நாசகார போர்க்கப்பல் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருகிற நிலையில், இது இந்திய கடற்படையின் கடல்சார் திறனை மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ரேடார், ஏவுகணைகள்

இந்தக் கப்பலின் சிறப்பம்சங்கள் வருமாறு:-

* இதில் அதிநவீன ரேடார், தரையில் இருந்து புறப்பட்டுச் சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை, தரையில் இருந்து புறப்பட்டு வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை உள்ளிட்ட போர்த்தளவாடங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

* இந்தக் கப்பலின் நீளம் 163 மீட்டர், அகலம் 17 மீட்டர். முழுமையான கொள்ளளவில் இதன் எடை 7,400 டன்

* கோவாவில் உள்ள சரித்திரப்புகழ் பெற்ற மர்மகோவா துறைமுக நகரின் பெயர்தான், இந்தக் கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

2-வது கப்பல்

* இந்திய கடற்படைக்கான 4 விசாகப்பட்டினம் தர நாசகார கப்பல்களில் இந்தக் கப்பல், 2-வது கப்பல் ஆகும். இந்தக் கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு கழகம் வடிவமைத்தது. மசாகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனம் கட்டி உள்ளது.

* இந்த கப்பல், அணு ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போர் நிலைமைகளில் போரிடுவதற்கு ஏற்ற வகையில் அதிநவீன கண்காணிப்பு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரேடார்கள், துப்பாக்கி இலக்கு அமைப்புகளுக்கு இலக்கு தரவுகளை வழங்கும்.

* இந்தக் கப்பலின் நீர்மூழ்கி போர் திறன்கள், உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ராக்கெட் லாஞ்சர்கள், டார்பிடோ லாஞ்சர்கள், ஏ.எஸ்.டபிள்யூ ஹெலிகாப்டர்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

* அதிநவீன தொலை உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

* இந்தக் கப்பல் சக்தி வாய்ந்த 4 எரிவாயு விசையாழிகளால் இயக்கப்படுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 30 கடல்மைல் ஆகும்.

கடற்படையில் நாளை சேர்ப்பு

இந்த அதிநவீன நாசகார போர்க்கப்பல், இந்திய கடற்படையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முறைப்படி இணைகிறது.மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் நடக்கிற விழாவில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கி, இந்தக் கப்பலைக் கடற்படையில் சேர்க்கிறார்.

இந்தக் கப்பல், இந்தியக் கடற்படையில் இணைவதால் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு வலு அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்