கன்னடம் உள்பட மாநில மொழிகளை அழிக்க மத்திய அரசு சதி

கன்னடம் உள்பட மாநில மொழிகளை அழிக்க மத்திய அரசு சதி செய்வதாக குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Update: 2022-10-10 18:45 GMT

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு அதிர்ச்சி

மத்திய பா.ஜனதா அரசு தனது வழக்கமான விஷயத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதாவது, ஒட்டுமொத்த இந்தியாவையும் தனது மறைமுக திட்டத்தின் மூலம் தன் பிடியில் வைத்துக்கொள்ள பா.ஜனதா முயற்சி மேற்கொண்டுள்ளது. உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, இந்தி திணிப்பு குறித்து ஜனாதிபதிக்கு பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை வழங்கியுள்ளது.

அந்த குழுவின் பரிந்துரைகளை படித்த எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மேலும் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் முயற்சி ஆகும். கன்னடம் உள்பட மாநில மொழிகளை நசுக்கிவிட்டு இந்தியை திணித்து இந்தியாவை இந்துஸ்தான் ஆக்க சதித்திட்டம் தீட்டப்படுகிறது. அந்த பரிந்துரைகள் கூட்டாட்சி தத்துவத்தை அடியோடி அழிப்பதாக உள்ளது.

மும்மொழி கொள்கை

ஒரே நாடு ஒரே மாதம், ஒரே மொழி என்னும் விசித்திரமான கொள்கை மூலம் கூட்டாட்சி முறையை ஒழிப்பதே அமித்ஷா குழுவின் நோக்கம் ஆகும். ஒருமொழி ஏகாதிபத்தியத்தை நாடு ஏற்றுக்கொள்ளாது. இது நாட்டை பிளவுப்படுத்த காரமணாக அமைந்துவிடும். அதனால் மத்திய அரசு உடனடியாக அந்த அறிக்கையை திரும்ப பெற்று அனைத்து மொழிகளையும் சமமாக பார்க்க வேண்டும்.

இந்தி மொழி பேசும் பகுதிகளிலும் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்தியை விட பிற மொழி பேசும் மக்களே அதிகம் உள்ளனர். உண்மை நிலை இவ்வாறு இருந்தாலும் இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மும்மொழி கொள்கையை முடிவு கொண்டு வரவும் முயற்சி நடக்கிறது.

மத்திய அரசு சதி

தென்இந்தியாவில் முயற்சி பலிக்காது என்று பா.ஜனதா கருதி குறுக்கு வழியில் கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்தது. அதன் விளைவாக ஒவ்வொரு நிலையிலும் கன்னடத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கன்னடம் உள்பட அனைத்து மாநில மொழிகளையும் அழிக்க மத்திய அரசு சதி செய்துள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக மாநிலங்கள் குறிப்பாக தென்இந்திய மாநிலஙகள் ஒன்றாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ளூர் மொழி, இந்தியில் மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று அறிக்கை சொல்கிறது. இதன் மூலம் இந்தி திணிக்கப்படுகிறது. இனி மாநில மொழிகள் மீது பா.ஜனதா காட்டும் அன்பை நம்ப முடியாது. இந்தியா என்றால் இந்து, இந்தி மட்டுமல்ல, இந்தியா அனைவருக்கும் சொந்தமானது.

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்