ஒடிசா ரெயில் விபத்து நடந்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு...!

ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

Update: 2023-06-06 17:25 GMT

புவனேஷ்வர்,

மேற்குவங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வந்துகொண்டிருந்தது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் ரெயில் சென்றுகொண்டிருந்தது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. அப்போது, ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து தடம் மாறி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். மேலும், 1 ஆயிரத்து 100 பேர் படுகாயமடைந்தனர்.

இதனிடையே, 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரிக்க ரெயில்வே துறை உத்தவிட்டது. இந்த ரெயில் விபத்தில் சதித்திட்டம் இருக்கலாம் என்பதால் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

தண்டவாள சிக்னல் தொழில்நுட்பத்தை யாரேனும் மாற்றியமைத்தார்களா? இதனால் தான் விபத்து ஏற்பட்டதா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசாவில் விபத்து நடந்த பகுதியில் சிபிஐ அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து நடந்த பகுதி, பகனகா பஜார் ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே ஒரு முறை ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்