உளவு பார்த்த கடற்படை முன்னாள் அதிகாரி கைது சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை
இந்திய ராணுவம் பற்றி உளவு பார்த்ததாக கடற்படை முன்னாள் அதிகாரியையும், பத்திரிகையாளர் ஒருவரையும் சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது.
புதுடெல்லி,
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி ஆசிஷ் பதக், சுதந்திர பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி ஆகிய 2 பேரும் சேர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பு படைகளுக்கான எதிர்கால ஆயுத கொள்முதல் பற்றி உளவு பார்த்து, முக்கிய விவரங்களை சட்டவிரோதமாக சேகரித்து, அவற்றை அவர்கள் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு வழங்குவதாக டெல்லி சிறப்பு போலீஸ் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல்கள் பேரில் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் இந்த விசாரணை மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
2 பேரும் உளவு வேலையில் ஈடுபட்டதின் பின்னணி பற்றி சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தியதுடன், கண்காணித்தும் வந்தது. அதன் அடுத்த கட்டமாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், விவேக் ரகுவன்ஷியின் வசிப்பிடமான ஜெய்ப்பூர் உள்பட 12 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர். இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
சோதனையின் முடிவில் ஆசிஷ் பதக், விவேக் ரகுவன்ஷி ஆகிய இருவர் மீதும் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் பிரிவு 3 (உளவு பார்த்தல்), இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 120-பி (குற்ற சதி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து, 2 பேரையும் சி.பி.ஐ. கைது செய்தது.
கைது செய்யப்பட்ட இருவரும் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 6 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் காவலில் வைத்து துருவித்துருவி விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் அவர்கள் சேகரித்த பாதுகாப்பு படை ஆயுத கொள்முதல் ரகசியங்கள், அவற்றை எந்தெந்த நாடுகளுக்கு வழங்கினர் என்பன போன்ற விவரங்கள் தெரியவரும்.