காவிரி நதி நீர் விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா மறு ஆய்வு மனு தாக்கல்
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. சமீபத்தில் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு, தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கூறி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் பரிந்துரை செய்தது.
அதையடுத்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்குமாறு கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தற்போது கர்நாடகம் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியில் இருந்து தினம் தோறும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியில் இருந்து நீர் திறந்து விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு வரும் 6 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் மறு ஆய்வு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது.