கல்லூரி வளாகங்களில் சாதிப் பாகுபாடு - பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

கல்லூரி வளாகங்களில் சாதிப் பாகுபாட்டை ஒழிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2023-07-07 16:33 GMT

புதுடெல்லி,

கல்லூரி வளாகங்களில் நிலவிய சாதிப் பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்ட ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா மற்றும் மராட்டிய மாநில மருத்துவக் கல்லூரி மாணவி பாயல் தாட்வி ஆகியோரின் தாய்மார்கள் தாக்கல் செய்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஏ.எஸ்.போப்பண்ணா, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், சாதியப் பாகுபாட்டால் எதிர்காலத்தில் இனியும் ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இழக்கக் கூடாது என்றும், அதற்கு பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி.) உரிய நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கல்லூரி வளாகங்களில் சாதிப் பாகுபாட்டை ஒழிக்க பல்கலைக்கழக மானியக்குழு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும். கல்லூரி வளாகங்களில் சாதிப் பாகுபாட்டை ஒழிப்பது தொடர்பான முயற்சியில் இனி யு.ஜி.சி. மனுதாரர்களையும் ஆலோசித்து கொள்கைகளை வகுக்க வேண்டும்.

மேலும், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவ சமுதாயத்தை முன்னணிக்கு கொண்டுவர யு.ஜி.சி. என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்