அஸ்வத் நாராயண் மீது வழக்குப்பதிவு
சித்தராமையாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
அஸ்வத்நாராயண் மீது வழக்குப்பதிவு
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் மண்டியாவில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, உங்களுக்கு யார் வேண்டும் திப்புவா? சாவர்க்கரா?. திப்புவை உரிகவுடாவும், நஞ்சேகவுடாவும் முடித்தது போல, அதே வழியில் சித்தராமையாவை முடிக்க வேண்டும் என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது சித்தராமையாவை ெகாைல செய்ய வேண்டும் என்ற நோக்கில் அஸ்வத் நாராயண் பேசியதாக பரபரப்பாகியது.
அப்போதே முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் மீது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமணன், மைசூரு தேவராஜா போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அவர் தேவராஜா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
இதேபோல், சித்தராமையா 23 இந்துகளை கொலை செய்ததாக கூறிய பெல்தங்கடி பா.ஜனதா எம்.எல்.ஏ. ஹரீஷ் பூஞ்சா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வெறுப்பு அரசியல்
இதுகுறித்து முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களிடம் கூறியதாவது:-
சித்தராமையாவுக்கு திப்பு மீதுள்ள அன்பை கண்டிக்கிறோம். காங்கிரஸ் கட்சியையும், சித்தராமையாவையும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், 'முடிக்க' வேண்டும் என்று கூறினேன். சித்தராமையா மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு. கொள்கை அளவில் எங்களுக்குள் வித்தியாசம் இருந்தாலும், அவரை நான் மதிக்கிறேன்.
எனது அரசியல் வாழ்க்கையில் நான் யாருக்கும் தீங்கு செய்ததில்லை. நான் பேசியது சித்தராமையாவின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி போலீஸ் கூட்டத்தை கூட்டி என் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கேட்டுள்ளனர். அதன்பிறகு தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் வெறுப்பு அரசியல் செய்கிறார்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது வெறுப்பு அரசியல் செய்ததில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதனை துணிச்சலுடன் எதிர்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.