குடியரசு தின கொண்டாட்டத்தின் போது என்.சி.சி. உடையில் மாணவர்கள் மத கோஷம் - போலீசார் விசாரணை

குடியரசு தின கொண்டாட்டத்தின் போது என்.சி.சி. உடையில் இருந்த மாணவர்கள் மத கோஷங்களை எழுப்பினர்.

Update: 2023-01-28 13:08 GMT

லக்னோ,

இந்தியாவின் 74-வது குடியரசு தினம் கடந்த வியாழக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் அணிவகுப்புடன் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின கொண்டாட்டத்தின் போது மத கோஷம் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அலிகாரில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, குடியரசு தின கொண்டாட்டத்தில் தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.) இடம்பெற்றிருந்த சில மாணவர்கள் கொடிக்கம்பம் முன் நின்று கடவுளே சிறந்தவர் என்பதை குறிப்பிடும் வகையில் அல்லா ஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பினர்.இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான வீடியா வெளியாகி வைரலான நிலையில் மற்றொரு தரப்பு மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு முன் பாரத மாதா கி ஜெய், வந்தே மாதரம் என்ற கோஷங்களை எழுப்பிய வீடியோவும் வைரலானது.

தேசியக்கொடி கம்பம் முன் நின்று என்.சி.சி. உடையில் மதக்கோஷம் எழுப்பியது தொடர்பாக வாஹிதுஷமான் என்ற பிஏ முதலாம் ஆண்டு மாணவனை பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்