பி.பி.எல்., அந்தியோதயா கார்டுகள் வைத்திருந்த 4,651 பேர் மீது வழக்குப்பதிவு
குடகில், விதிமுறையை மீறி சட்டவிரோதமாக பி.பி.எல். மற்றும் அந்தியோதயா கார்டுகள் வைத்திருந்த 4,651 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.7¾ லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
குடகு:
பி.பி.எல். கார்டுகள்
கர்நாடகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் பொது வினியோகத்துறை சார்பில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு ஏற்ப ஏ.பி.எல், பி.பி.எல்., அந்தியோதயா ஆகிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் வசதிபடைத்தவர்களுக்கு அந்தியோதயா கார்டுகள், பி.பி.எல் கார்டுகளை ரத்து செய்து அரசு உத்தரவிட்டது.
அதாவது ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மேல் இருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், 3 ஹெக்டேருக்கும் அதிகமாக நிலம் வைத்திப்பவர்கள், 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு பி.பி.எல் மற்றும் அந்தியோதயா கார்டுகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி அவர்கள் அந்த கார்டுகளை வைத்து சலுகைகளை பெற்று வருவது தெரியவந்தால் உணவு பொது வினியோகத்துறை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றன.
4,651 பேர் மீது வழக்கு
அதன்படி குடகு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக அந்தியோதயா மற்றும் பி.பி.எல். கார்டுகள் வைத்திருக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விராஜ்பேட்டையில் 1,968 பேர், சோமவார்பேட்டையில் 1,221 பேர் என மொத்தம் 4,651 பேர் சட்டவிரோதமாக பி.பி.எல்., அந்தியோதயா கார்டுகள் ்வைத்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உணவு பொதுவினியோகத்துறை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.7.77 லட்சத்தை அபராதமாக வசூலித்துள்ளனர்.