மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி
நஞ்சன்கூடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
மைசூரு;
சாம்ராஜ்நகர் தாலுகா எக்கோடா கிராமத்தை சோ்ந்தவர்கள் மகாதேவா (வயது 50), மகேஷ் (40). இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு டவுன் பகுதிக்கு வேலை விஷயமாக வந்து இருந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காமராஜ் நகர் அருகே உள்ள சாலையில் சென்றபோது, அதேசாலையில் நீர்ப்பாசனத்துறை இன்ஜினீயர் நடேஷ் (59) என்பவர் தனது காரில் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கார், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கிவீசப்பட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைபாா்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் நஞ்சன்கூடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நஞ்சன்கூடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய நடேஷ் போலீசில் சரண் அடைந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.