சாவர்க்கரின் தியாகத்தை புறக்கணிக்க முடியாது - சரத்பவார்

சாவர்க்கரின் தியாகத்தை புறக்கணிக்க முடியாது என்று கூறிய சரத்பவார், நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

Update: 2023-04-01 21:52 GMT

நிதின் கட்காரியுடன் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நாக்பூர் சென்றிருந்தார். அப்போது அங்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியின் வீட்டுக்கு சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதற்கிடையே நாக்பூர் பத்திரிகையாளர் மன்றத்தில் சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

சாவர்க்கர் நாட்டு சுதந்திரத்துக்காக பாடுபட்டவர். அவரது தியாகத்தை யாராலும் புறக்கணிக்க முடியாது. அதற்காக சாவர்க்கர் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக மாற்றுவதை ஏற்க முடியாது.

முற்போக்கு சிந்தனை

சாவர்க்கர் விவகாரம் புதிய பிரச்சினை அல்ல. நான் கூட விமர்சித்து இருக்கிறேன். ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. அவரது இந்து மகா சபாவை பற்றி விமர்சித்து உள்ளேன். இதபோல 32 வருடத்துக்கு முன் நாடாளுமன்றத்தில் சாவர்க்கரை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறேன். ரத்னகிரியில் சாவர்க்கர் வீடு கட்டினார். அதன் முன் சிறிய கோவில் கட்டினார். அந்த கோவிலில் வால்மீகி சமூகத்தை சேர்ந்தவரை பூசாரியாக நியமித்தார். இது அவரது முற்போக்கு சிந்தனையாக கருதுகிறேன்.

முக்கிய பிரச்சினைகள்

தற்போது நாடு பல முக்கிய மக்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக 18 முதல் 20 கட்சிகள் சேர்ந்து டெல்லியில் ஆலோசனை நடத்தினோம். அதிகாரத்தில் இருப்பவர்களால் நாடு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் பற்றி நான் எடுத்துரைத்தேன்.

வெளிநாட்டு மண்ணில் இந்திய பிரச்சினைகளை பற்றி ராகுல்காந்தி பேசுவதாக கூறுகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் இவ்வாறு பேசப்பட்டு உள்ளன.

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்