பெண்ணின் வயதை ஆதார் அட்டையில் ஆராய்ந்த பின் உறவில் ஈடுபட வேண்டுமா? மைனர் பெண் வன்கொடுமை வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவு!

ஒரு நபர் ஒருமித்த உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் பெண்ணின் ஆதார் அட்டையை ஆராய வேண்டிய அவசியமில்லை என்று டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2022-08-30 16:02 GMT

புதுடெல்லி,

ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் ஒருமித்த உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் ஆதார் அட்டை அல்லது பான் கார்டை ஆராய வேண்டிய அவசியமில்லை என்று டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஒரு நபர் தன்னுடன் நெருங்கி பழகிய மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அந்த நபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு முதல் அந்த நபருடன் பெண்ணுக்கு தொடர்பு இருந்தது. இந்நிலையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த வாரம் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகஸ்ட் 24 தேதியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

2019 மற்றும் 2021 இல் நடந்ததாகக் கூறப்படும் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மீது ஏப்ரல் மாதத்தில் தான் எப்.ஐ.ஆர் பதிவாகியுள்ளது. இது குறித்தும் இந்த தாமதத்துக்கான காரணம் பற்றி பெண்ணின் தரப்பில் போதுமான விளக்கமளிக்க முடியவில்லை. ஆகவே இது சூழ்ச்சி வழக்காக தெரிகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் விண்ணப்பதாரருடன் பெண்ணுக்கு தொடர்பு இருந்தது. ஒருவேளை விண்ணப்பதாரர் பெண்ணை மிரட்டியிருந்தால், அவர் காவல்துறையை அணுகி புகார் அளிக்க போதிய கால அவகாசம் இருந்தது என்று நீதிபதி கூறினார்.

பல்வேறு ஆவணங்களின்படி, அந்த பெண்ணுக்கு மூன்று வெவ்வேறு பிறந்த தேதிகள் உள்ளன. இதனையடுத்து, ஒரு நபர் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த பெண்ணுடன் ஒருமித்த உடல் உறவில் ஈடுபடுவதற்கு முன்பு ஆதார் அட்டை அல்லது பான் கார்டைப் பார்க்கவோ அல்லது அவரது பள்ளிப் பதிவுகளில் இருந்து அவரது பிறந்த தேதியை சரிபார்க்கவோ தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியது.

அந்த நபருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்துவதற்காக மட்டுமே, பெண்ணின் தரப்பு வழக்குரைஞர் தனது வசதிக்கு ஏற்ப பெண்ணின் பிறந்த தேதிகளை அளித்துள்ளார். ஆதாரில் உள்ள படி அந்த பெண் மைனர் அல்ல என்பது போதுமான ஆதாரம். ஆகவே அந்த நபர் ஒரு சிறுமியை வன்கொடுமை செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகஸ்ட் 24 தேதியிட்ட உத்தரவில் கூறினார்.

இது போல, மற்றவர்களுக்கு எதிராக இந்த பெண்ணால் இதேபோன்ற எப்ஐஆர்கள் நிலுவையில் இருப்பது குறித்து விரிவான விசாரணையை உறுதிப்படுத்துமாறு போலீஸ் கமிஷனரை கோர்ட்டு கேட்டுக் கொண்டது.

குற்றம் சாட்டப்பட்ட நபர் ரூ.20,000 உள்ளூர் உத்தரவாதத்துடன் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போதெல்லாம் அவர் அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் செய்து நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறும், குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், வழக்குடன் தொடர்புடையவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கோர்ட்டு உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்