இட ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியுமா? என விளக்க வேண்டும்
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மீறாமல் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியுமா என்று விளக்கம் அளிக்கவேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்தது தங்களின் சாதனை என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதை எப்படி அமல்படுத்த போகிறோம் என்பது குறித்த தகவல்களையும் கூற வேண்டும். அந்த மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து நீதிபதி நாகமோகன்தாஸ் குழுவை எங்கள் அரசு அமைத்தது.
அந்த குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவு செய்திருப்பதை நான் வரவேற்கிறேன். இந்த இட ஒதுக்கீடு அதிகரிப்பு நடைமுறைக்கு வர வேண்டும் என்றால் முதலில் சட்டசபையை கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
அதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசியல் சாசனத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும். அங்கு ஒப்புதல் கிடைத்த பிறகு அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும். அதன் பிறகே இந்த இட ஒதுக்கீடு அதிகரிப்பு நடைமுறைக்கு வரும். சுப்ரீம் கோர்ட்டு, இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பின்படி மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறக்கூடாது. இந்த தீர்ப்பை மீறாமல் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியுமா?. இதுகுறித்து கர்நாடக அரசு விளக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.