ஹைட்ரஜனில் இருந்து பசுமை எரிபொருள் தயாரிக்க ரூ.19,744 கோடி திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்

ஹைட்ரஜனில் இருந்து பசுமை எரிபொருள் தயாரிக்க ஊக்கத்தொகை அளிக்கும் ரூ.19 ஆயிரத்து 744 கோடி திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

Update: 2023-01-04 19:45 GMT

புதுடெல்லி, 

ஹைட்ரஜனில் இருந்து பசுமை எரிபொருள் தயாரிக்க ஊக்கத்தொகை அளிக்கும் ரூ.19 ஆயிரத்து 744 கோடி திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

ஹைட்ரஜன் மூலம் பசுமை எரிபொருள் தயாரிக்க ஊக்கத்தொகை அளிக்கும் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கு ஆரம்பகட்ட ஒதுக்கீடாக ரூ.19 ஆயிரத்து 744 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஹைட்ரஜன் மூலம் மாசு இல்லாத எரிபொருள் தயாரிக்கலாம். இதை வாகனங்களில் பயன்படுத்தலாம். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இரும்பு ஆலை ஆகியவற்றுக்கு எரிபொருள் ஆதாரமாக பசுமை ஹைட்ரஜன் பயன்படுகிறது.

இந்தியாவை உலகின் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி கூடமாக மாற்றுவதே திட்டத்தின் நோக்கம். ஆண்டுக்கு 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் வீதம் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக 2030-ம் ஆண்டுக்குள் ரூ.8 லட்சம் கோடி முதலீடு செய்யவும், 6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதியை ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு குறைப்பதும், பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவற்றின் ஒலிபரப்பு கட்டமைப்புகளை தரம் உயர்த்தும் ரூ.2 ஆயிரத்து 539 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவா மாநிலம் மோபாவில் கடந்த மாதம் புதிய பசுமை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பெயரை சூட்ட வேண்டும் என்று மாநில மந்திரிசபை ஒருமனதாக தீர்மானம் நிைறவேற்றி அனுப்பியது. அதை ஏற்று, அந்த விமான நிலையத்துக்கு 'மனோகர் சர்வதேச விமான நிலையம்' என்று பெயர் சூட்ட மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்