தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் சரிந்தது

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதால் நீர்மட்டம் சரிந்ததால் கே.ஆர்.எஸ். அணையில் உள்ள நாராயணசாமி கோவில் வெளியே தெரிகிறது.

Update: 2023-09-22 21:33 GMT

மண்டியா:-

நாராயணசாமி கோவில்

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்தேக்க பகுதி மைசூருவில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கே.ஆர்.எஸ். அணை முழுமையாக நிரம்பவில்லை. தற்போதும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காலை 97.02 அடி தண்ணீர் இருந்தது. நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்தேக்க பகுதியில் உள்ள நாராயணசாமி கோவில் வெளியே தெரிய தொடங்கி உள்ளது. நீர்மட்டம் இன்னும் குறைந்தால் அந்த கோவில் முழுமையாக வெளியே தெரியும். மழை பெய்யாவிட்டால் அந்த கோவில் விரைவில் முழுமையாக வெளியே தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் திறப்பு

நேற்று கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 5,845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 2,673 கனஅடியும், கால்வாய்களில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் கபினி அணை அமைந்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நேற்று காலை 2,275.36 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,359 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கால்வாய்களில் வினாடிக்கு 2,350 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 4,673 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடிக்கு மேல் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்