இடைத்தேர்தல் முறைகேடு: தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-02-13 10:53 GMT

புதுடெல்லி,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதன்பின்னர் அதிமுக எம்.பி.சி.வி. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. இடைத்தேர்தல் வாக்காளர் விவரங்களை வீடு, வீடாக சென்று அதிமுக நிர்வாகிகள் சரி பார்த்தனர். அதிமுக சரி பார்த்த வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கினோம்.

வாக்காளர் பட்டியலில் உள்ள சுமார் 40 ஆயிரம் பேர் அந்த தொகுதியில் வசிக்கவில்லை. சுமார் 8 ஆயிரம் பேரின் பெயர்கள் 2 முறை வாக்காளர் பட்டியலில் உள்ளது. முறைகேடாக சுமார் 40,000 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்