பெங்களூரு மேம்பாலத்தில் நின்று ரூபாய் நோட்டுகளை வீசிய தொழில் அதிபர்; பணத்தை எடுக்க பொதுமக்கள் போட்டாபோட்டி

பெங்களூரு கே.ஆர். மார்க்கெட் மேம்பாலத்தில் நின்று ரூபாய் நோட்டுகளை தொழில்அதிபர் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பணத்தை பொதுமக்கள் போட்டாபோட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.

Update: 2023-01-24 18:45 GMT

பெங்களூரு:

கே.ஆர்.மார்க்கெட்

பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி. அது இன்றைய காலக்கட்டத்தில் உண்மையாகி வருவதை பல நிகழ்வுகள் நமக்கு வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. பணத்தாசை என்பது யாரையும் விட்டுவைக்காது என்று சொன்னால் மிகையல்ல. அந்த அளவுக்கு பணம் மனிதனுடன் ஒன்றாகிவிட்டது. இவ்வாறு முக்கியத்துவம்பெற்ற பணத்தை மேம்பாலத்தில் நின்று ஒருவர் வீசிய சம்பவமும், அதனை எடுக்க பொதுமக்கள் போட்டாபோட்டி போட்ட நிகழ்வும் பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் நேற்று அரங்கேறியது.

டிப்-டாப் ஆசாமி

எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகரின் மையப்பகுதியில் உள்ளது கே.ஆர்.மார்க்கெட். நேற்று காலை 10.45 மணி அளவில் வழக்கம்போல் ஒருபுறம் மார்க்கெட்டுக்கு வியாபாரம் செய்ய வந்த வியாபாரிகள், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் என கூட்டம் அலைமோதியது. இதனால் வாகன நெரிசலுடன் மார்க்கெட் சாலை பரபரப்புடன் காட்சி அளித்தபடி இருந்தது.

இந்த நிலையில் கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் கோர்ட்-சூட் அணிந்து டிப்-டாப் ஆக ஆசாமி ஒருவர் வந்திறங்கினார். அவர் தனது கழுத்தில் பெரிய சுவர் ெகடிகாரத்தை கட்டியிருந்தார். பின்னர் தான் தோளில் போட்டிருந்த பையில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்து மேம்பாலத்தின் மீது இருந்து மார்க்கெட் சாலையின் இடதுபுறம் வீசினார்.

மக்கள் போட்டாபோட்டி

இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் சில நிமிடங்கள் வியப்புடன் அந்த ரூபாய் ேநாட்டுகளை எடுத்தனர். மேம்பாலத்தில் இருந்து அந்த நபர் தொடர்ந்து பணத்தை வீசியபடி இருந்தார். அதன் பிறகு மேம்பாலத்தின் இடதுபுறம் சென்றும் ரூபாய் நோட்டுகளை கையில் அள்ளி வீசினார். இதனால் அப்பகுதியிலும் பணத்தை எடுக்க மக்கள் கூடினர்.

இவ்வாறு திடீரென்று வாலிபர் மேம்பாலத்தில் நின்றபடி பண மழை பொழிந்ததால், அதனை எடுக்க பொதுமக்கள் பலரும் போட்டா

போட்டி போட்டு கொண்டனர். இதனால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத அந்த கே.ஆர்.மார்க்கெட் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. உடனே போக்குவரத்து போலீசாரும், கே.ஆர்.மார்க்கெட் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

வீடிேயா வைரல்

போலீசார் வருவதை பார்த்ததும் பணத்தை வீசிஎறிந்தபடி இருந்த டிப்-டாப் ஆசாமி அங்கு நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

இதற்கிடையே மேம்பாலத்தில் இருந்து டிப்-டாப் ஆசாமி ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்ததையும், அதனை மக்கள் எடுக்க போட்டாபோட்டி போட்டது தொடர்பான நிகழ்வை பலரும் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். அந்த வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாகி பேசும் பொருளானது.

தொழில் அதிபர்

இதற்கிடையே கே.ஆர்.மார்க்கெட் போலீசாரும் பணமழை பொழிந்த நபர் பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில், மேம்பாலத்தில் இருந்து பணத்தை வீசியவர் பெங்களூரு நாகரபாவியை சேர்ந்த அருண் என்பதும், இவர் தொழில் அதிபர் என்பதும் தெரியவந்தது. யூ-டியூப் சேனல் நடத்தி வருவதுடன் அருண் வி டாட் 9 நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் 10 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் என ரூ.4 ஆயிரத்தை வீசியது தெரியவந்துள்ளது.

அவர் எதற்காக கழுத்தில் கடிகாரத்தை கட்டிக்கொண்டு வந்து மேம்பாலத்தில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கே.ஆர்.மார்க்கெட் போலீசார் தாமாக முன் வந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக அருண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்