உ.பி.யில் ரூ.14 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை திறக்கப்பட்டு 5 நாட்களில் கனமழையால் சேதம்!

உத்தரபிரதேசத்தில் பந்தல்கண்ட் அதிவிரைவு சாலை கனமழையால் சேதமடைந்துள்ளது.

Update: 2022-07-22 06:45 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில், பந்தல்கண்ட் அதிவிரைவு சாலை கனமழையால் சேதமடைந்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.14 ஆயிரம் கோடி செலவில் 296 கி.மீ நீளத்திற்கு இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை மூலம், ஆக்ரா - லக்னோ அதிவிரைவுச் சாலை, யமுனா அதிவிரைவுச் சாலை வழியாக டெல்லியை அடைய முடியும். 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 29-ந் தேதி இந்த பந்தல்கண்ட் அதிவிரைவு சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த சாலையை ஜூலை 16ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த சாலை திறக்கப்பட்ட 5 நாட்களே ஆன நிலையில், தொடர் மழையால் சாலை சேதமடைந்துள்ளது.

ஜலான் மாவட்டத்தில் உள்ள சிரியா சேலம்பூரில் புதன்கிழமை இரவு பெய்த மழையால் சாலையின் ஒரு பகுதியில் 1.5 அடி ஆழமுள்ள பள்ளங்கள் உருவாகின. இதையடுத்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சாலையை சரி செய்யும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.

சாலையை சீரமைக்க புல்டோசர்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் ஒரு குழுவை உ.பி. எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை ஆணையம் அனுப்பியது. உடனடியாக பள்ளங்கள் சரி செய்யப்பட்டு சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, பந்தல்கண்ட் அதிவிரைவு சாலை திறப்பு விழா நிகழ்ச்சியின் பொது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த சாலை தங்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பையும், பந்தல்கண்ட் பகுதியில் பொருளாதார முன்னேற்றத்தையும் அளிக்கும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், மோசமான கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய பாஜக எம்.பி வருண் காந்தி, அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

"ரூ.15,000 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த விரைவுச் சாலை 5 நாட்கள் மழைக்குக் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்றால், அதன் தரம் குறித்து கடுமையான கேள்விகள் எழுகின்றன. இத்திட்டத்தின் தலைவர், சம்பந்தப்பட்ட பொறியாளர் மற்றும் பொறுப்பான நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

மேலும், உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் பாதியில் முடிக்கப்பட்ட இத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக சாலை திறப்புவிழா அன்று எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியிருந்தார். இப்போது சாலை சேதம் ஏற்பட்டிருப்பதன் மூலம், அவர் கூறியது உண்மை என்பது தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்