16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 6 இளைஞர்களின் வீடுகள் ஜேசிபி வாகனம் மூலம் தகர்ப்பு!

மத்தியப் பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவர் ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-19 07:37 GMT

போபால்,

மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தில் 16 வயது மைனர் சிறுமி ஒருவர் ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரேவா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நைகர்ஹி பகுதிக்கு கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது.இந்த வழக்கில், மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் கூற்றுப்படி, அவர் சனிக்கிழமை மதியம் ஒரு நண்பருடன் கோவிலுக்குச் சென்றுள்ளார். கோயிலுக்குச் சென்றுவிட்டு இருவரும் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 6 இளைஞர்கள் சிறுமியையும் அவரது நண்பரையும் மிரட்டத் தொடங்கினர். இருவரையும் பிடித்து அருகில் உள்ள அருவிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த இளைஞர்கள் சிறுமியை பலாத்காரம் செய்தனர்.

அதன்பின், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அந்த சிறுமியை அடித்து அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். சிறுமியின் நண்பர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

சிறுமியின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டு சிறார்களும் அடங்குவர். மீதமுள்ள மூன்று குற்றவாளிகளும் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்கள் தேடப்பட்டு வருவதாகவும் போலீஸ் எஸ்.பி சோங்கர் கூறினார்.

இதற்கிடையில், அரசு உத்தரவுப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சொந்தமான சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி இன்று நடைபெற்றது.

சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் திங்கள்கிழமை காலை, கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளின் வீடுகளை இடித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அரசு உத்தரவுப்படி, இடிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.

ரேவா மாவட்ட கலெக்டர் மனோஜ் புஷ்ப் கூறுகையில், "நைகர்ஹியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் மற்றும் மவுகஞ்ச் சப்-டிவிஷனல் அதிகாரி போலீஸ் முன்னிலையில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரின் வீடுகளும் இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் தகர்க்கப்பட்டது. மீதமுள்ளவர்களின் வீடுகளில் சோதனை முடிந்த பின் அவை இடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்