பட்ஜெட் கூட்டத்தொடர்: ராஜ்யசபை வருகிற 23-ந்தேதி காலை வரை ஒத்தி வைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர் அமளியால் ராஜ்யசபை வருகிற 23-ந்தேதி காலை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-03-21 09:59 GMT



புதுடெல்லி,


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு, கடந்த 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 6-ந்தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும். எனினும், கூட்டத்தொடர் தொடங்கியது முதல், இரு அவைகளிலும் ராகுல் காந்தி மற்றும் தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றை பற்றி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி, கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

இதனால், தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டது. கடந்த வாரம் முழுவதும், இங்கிலாந்து நாட்டில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டபோது பேசிய விவகாரம் பற்றி ஆளுங்கட்சியும், தொழிலதிபர் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினரும் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இரு அவைகளிலும் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டன. நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மோதி கொள்ளும் வகையில், ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கி பேசி கொண்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று காலை வழக்கம்போல் கூடின. இதில் உறுப்பினர்கள் பேச தொடங்கினர். எனினும், உறுப்பினர்களின் அமளியால், அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன.

இதுபற்றி நாடாளுமன்ற மேலவை தலைவர் பேசும்போது, விதி எண் 267-ன் கீழ் 14 நோட்டீஸ்கள் பெறப்பட்டு உள்ளன. அவற்றில் 9 நோட்டீஸ்கள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வந்து உள்ளன என கூறினார்.

இதனை தொடர்ந்து எழுந்த அமளியால் மதியம் 2 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதுபோன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் நேற்றுடன் மேலவை 10-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் தலா 2 முறையும், வெள்ளி கிழமை ஒரு முறையும் மேலவை ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

நாடாளுமன்றத்தின் மேலவையில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர், பா.ஜ.க. எம்.பி.க்கள், லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் கோஷங்களை எழுப்பினர். இதனால், அவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோன்று, மக்களவையிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தொடர்ந்து, கோஷங்களை எழுப்பினர். காங்கிரஸ் உறுப்பினர்களும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து, மக்களவையும் இன்று காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம் போல் இன்று காலை கூடின. இதில், உறுப்பினர்கள் மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி கூச்சலும், குழப்பமும் ஏற்படுத்தினர்.

இதனால், மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மதியம் 1 மணியளவில், தனது அறையில் வந்து சந்திக்கும்படி அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்துள்ளார்.

இதேபோன்று நாடாளுமன்ற மேலவையும் மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. அனைத்து கட்சி தலைவர்களும் தனது அறையில் வந்து சந்திக்கும்படி சபாநாயகர் ஜெகதீப் தன்கார் கேட்டு கொண்டார். இதனால், எம்.பி.க்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் நாடாளுமன்ற மேலவை கூடியதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை வருகிற 23-ந்தேதி (வியாழ கிழமை) காலை வரை ஒத்தி வைத்து அவை தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அதானி விவகாரம் எதிரொலியாக, தொடர்ந்து அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டு அவையில் எந்தவித நடவடிக்கைகளும் நடத்த முடியாமல் நாடாளுமன்றம் சீரான முறையில் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்