'வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க பட்ஜெட்டில் எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை' - பிரியங்கா காந்தி
வேலையில்லா திண்டாட்டம் குறித்து மத்திய நிதி மந்திரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பட்ஜெட்டில் எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"இந்திய மக்கள் எதிர்கொள்ளும் இரண்டு பெரிய பிரச்சினைகள் வேலையின்மை மற்றும் பணவீக்கம். இந்த இரண்டு பிரச்சினைகளையும் சமாளிக்க மத்திய அரசின் பட்ஜெட்டில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
வேலையின்மை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் பெரிய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. போன்றவையும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் பெரும் சவாலை சந்திக்கின்றன.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்கவும் பட்ஜெட்டில் எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை. வேலையில்லா திண்டாட்டம் குறித்து நிதி மந்திரி ஒரு வார்த்தை கூட பேசாதது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.
அதேபோல், பணவீக்கத்தால் தவித்து வரும் பொதுமக்களும் இந்த பட்ஜெட்டில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடந்த பத்து ஆண்டுகளாக நிவாரணத்திற்காக காத்திருக்கின்றனர். நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படவில்லை.
பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க தவறிய பா.ஜ.க. அரசு, சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது."
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.