சகோதர பாசம்; மனிதர்களை மிஞ்சிய சிம்பன்சி குட்டிகள்... வைரலாகும் வீடியோ

சகோதர பாசத்தில் மனிதர்களை மிஞ்சும் வகையில் இரு சிம்பன்சி குட்டிகள் நடந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2022-06-06 15:43 GMT


புதுடெல்லி,

சகோதர பாசத்தில் மனிதர்களை மிஞ்சும் வகையில் இரு சிம்பன்சி குட்டிகள் நடந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.  நம்மை போன்றே விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை ஒன்றுக்கொன்று அதிக பாச பிணைப்புடன் காணப்படும். இதற்கு எடுத்துக்காட்டாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், தனித்தனியாக இருந்த இரண்டு சிம்பன்சி குட்டிகள் சற்று தூரத்தில் இருந்து ஒன்றாக விடப்படுகின்றன. அவை ஒன்றை ஒன்று பார்த்து கொண்டதும் விரைந்து ஓடி சென்று கட்டியணைத்து கொண்டன.

அந்த குட்டிகள் இரண்டும் யாரோ சிலரால் பிடித்து வைக்கப்பட்டு இருந்துள்ளன. இதில், அவை கடுமையாக காயமடைந்து உள்ளன. இந்நிலையில், குட்டிகள் இரண்டையும் மீட்டு வெவ்வேறு இடங்களில் சிகிச்சை அளிக்க கொண்டு சென்றுள்ளனர்.

இதன்பின் அவை குணமடைந்ததும், மீண்டும் ஒன்றாக விடப்பட்டு உள்ளன. அவற்றை அழைத்து செல்ல வசதியாக, தனித்தனியாக கயிறு கொண்டு கட்டியுள்ளனர்.

அந்த இரு குட்டிகளும் ஒன்றையொன்று சந்தித்ததும் சகோதர பாசம் வெளிப்பட்டு உள்ளது. கயிறு கட்டியிருந்தபோதும், மெதுவாக நடந்து சென்று ஒன்றுடன் ஒன்று கட்டி கொண்டன.

இதுபற்றி அந்த வீடியோவின் தலைப்பில், சிறை பிடித்து வைக்கப்பட்டு இருந்த இரண்டு சகோதர சிம்பன்சி குட்டிகள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வேறு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. குணமடைந்த பின், அவை ஒன்றாக மீண்டும் இணைந்தன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வீடியோ வெளியானதும் இணையதளத்தில் அன்பு வெள்ளம் மடை திறந்து, பெருக்கெடுத்து ஓடியது. மீண்டும் இணைந்த குட்டி சகோதரர்களை கண்டு பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மொத்தம் 9 வினாடிகள் ஓட கூடிய இந்த வீடியோவை 48 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்