இரும்பு கம்பியால் தாக்கி தம்பி கொலை:தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

நிலத்தகராறில் தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-03-16 06:45 GMT

சிவமொக்கா-

நிலத்தகராறில் தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

நிலத்தகராறில் கொலை

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா குலகுணசே கிராமத்தை சேர்ந்தவர் பங்காரப்பா. திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளன. இவரது சகோதரர் மஞ்சுநாத். தொழிலாளி. இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் பங்காரப்பாவுக்கும், மஞ்சுநாத் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் மஞ்சுநாத், தகாத வார்த்தைகளால் திட்டி பங்காரப்பாவை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து சிகாரிப்புரா தாலுகா போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆயுள் தண்டனை

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. கோர்ட்டில், சிகாரிப்புரா தாலுகா போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி மானு தீர்ப்பு வழங்கினார். அதில் மஞ்சுநாத் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.40 லட்சம் அபராதமும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நீலம்மா, மஞ்சப்பா, ரவி, ரூபா ஆகியோருக்கு தலா ஒரு மாத சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்