துப்பாக்கி குண்டு பாய்ந்து அண்ணன்-தம்பி சாவு

முன்விரோதத்தில் பெண்ணை துப்பாக்கியால் சுட்டபோது, அந்த குறி தப்பி மோட்டார் சைக்கிளில் சென்ற அண்ணன், தம்பி மீது குண்டு பாய்ந்து அவர்கள் உயிரிழந்தனர்.

Update: 2023-02-20 18:45 GMT

சிக்கமகளூரு:

முன்விரோதம்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பிதரே கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளாள். இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த அங்கன்வாடி ஆசிரியையான மமதா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை மமதா, ரமேசின் வீட்டின் அருகே உள்ள குழந்தையை அங்கன்வாடி மையத்துக்கு அழைத்து செல்ல நின்றிருந்தார். அப்போதும் ரமேசுக்கும், மமதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

2 பேர் சாவு

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், வீட்டுக்குள் சென்று துப்பாக்கியை எடுத்து வந்து, மமதாவை நோக்கி சுட்டார். ஆனால் துப்பாக்கி குண்டு தவறுதலாக அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மீது பாய்ந்தது. அதாவது, அந்த சாலையில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றனர். அப்போது ரமேஷ் சுட்ட துப்பாக்கி குண்டு தவறுதாக 2 பேர் மீது பாய்ந்து அவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் இருந்த மற்றொருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாலேஒன்னூா் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனநலம் பாதிப்பு

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிந்தவர்கள் அதேப்பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 30), அவரது சித்தப்பா மகன் பிரகாஷ் (28) என்பது தெரியவந்தது. மேலும், பிரவீன் தனது சித்தப்பா மகன்கள் பிரகாஷ் மற்றும் பிரசாந்த் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரமேஷ், மமதாவை துப்பாக்கியால் சுட்டபோது, அந்த குறி தவறி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் மீது பாய்ந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ரமேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கைதான ரமேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த், அங்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்