நாளை பிரம்மோற்சவ விழா... திருப்பதியில் இன்று மாலை அங்குரார்பணம் நடைபெறுகிறது
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று மாலை அங்குரார்பணம் நடைபெறுகிறது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு வண்ண மலர்கள், அரியவகையான பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று மாலை அங்குரார்பணம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவிற்கு முன்தினம் அங்குரார் பணம் நடைபெறுவது வழக்கம். இன்று மாலை விஸ்வேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து விழா ஏற்பாடுகளை பார்வையிடுகிறார். பின்னர் வசந்த மண்டபத்தில் விஸ்வகேஸ்வரருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
இதையடுத்து பல்வேறு புதிய பானைகளில் நவதானியங்கள் விதைக்கப்படுகிறது. திருமலைக்கு நாளை வரும் ஆந்திர மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆஞ்சநேயர் சாமி கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டு வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கிறார். இதையடுத்து இரவு 7 மணிக்கு தங்க கொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்படுகிறது.
பின்னர் பெரிய சேஷ வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராய் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வருகிறார். 2-வது நாள் காலை சின்ன சேஷ வாகனத்திலும், மாலை அம்ச வாகனத்திலும், 3-வது நாள் காலை சிம்ம வாகனத்திலும், மாலை முத்து பல்லக்கு வாகனத்திலும், 4-வது நாள் கல்ப விருட்ச வாகனத்திலும், மாலை சர்வ பூபால வாகனத்திலும், 5-வது நாள் மோகினி வாகனத்திலும், மாலை தங்க கருட வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.
6-வது நாள் அனுமந்த வாகனமும், மாலை தங்கத்தேர் வாகன சேவை நடைபெறுகிறது. 7-வது நாள் காலை சூரிய பிரபை வாகனமும், மாலை சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது.
8-வது நாள் காலை தேர் வீதி உலாவும், மாலை குதிரை வாகன ஊர்வலம் நடைபெறுகிறது. 9-வது நாள் காலை அங்குள்ள தெப்பத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 4 மாட வீதியில் சாமி வீதி உலாவை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவைக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதியில் நேற்று 69,650 பேர் தரிசனம் செய்தனர். 20,409 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.51 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.