பிரம்மோற்சவ விழா: தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழக, ஆந்திர மாநில அரசு போக்குவரத்து துறை சார்பில் 300 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா பக்தர்கள் இன்றி கோவிலுக்கு உள்ளேயே சாமி வீதி உலா நடந்தது.
இந்த ஆண்டு தொற்று பரவல் குறைந்ததை அடுத்து பிரம்மோற்சவ விழா தினங்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக பிரமோற்சவ விழாவில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக தமிழக, ஆந்திர மாநில அரசு போக்குவரத்து துறை சார்பில் 300 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பதியில் நடந்தது. கூட்டத்தில் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஜிதேந்திரநாத் ரெட்டி பாஸ்கர் மற்றும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன், மண்டல மேலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 150 சிறப்பு பஸ்களும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 150 சிறப்பு பஸ்களும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதிக்கு 30 பஸ்களும், சென்னையில் இருந்து காளஹஸ்தி வழியாக 55 பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 20 பஸ்களும், வேலூரில் இருந்து சித்தூர் வழியாக 65 பஸ்களும் மற்றும் கன்னியாகுமரி, திருச்சி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
இதேபோல் புதுச்சேரி, காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி வழியாக ஆந்திர மாநில பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 10 சிறப்பு பஸ்களும், கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் வழியாக 15 பஸ்களும், கள்ளக்குறிச்சியில் இருந்து வேலூர் வழியாக 8 பஸ்களும், வேலூரில் இருந்து சித்தூர் வழியாக 26 பஸ்களும், திருப்பத்தூர் வேலூர் வழியாக 10 பஸ்களும், புதுச்சேரி காஞ்சிபுரம் வழியாக 10 பஸ்கள் என 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.