குத்து சண்டை போட்டியில் பங்கேற்ற வீரர் சாவு: எதிராளி தாக்கியதில் உயிரிழந்த சோகம்; வீடியோ வெளியாகி பரபரப்பு

பெங்களூருவில் குத்து சண்டை போட்டியில் பங்கேற்ற வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். எதிராளி தாக்கியதில் அவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வீடியோக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-07-14 16:30 GMT

பெங்களூரு: பெங்களூருவில் குத்து சண்டை போட்டியில் பங்கேற்ற வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். எதிராளி தாக்கியதில் அவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வீடியோக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குத்து சண்டை வீரர்

மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ், தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் நிகில்(வயது 23). இவர், குத்து சண்டை வீரர் ஆவார். பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஞானஜோதிநகர், பை இன்டர் நேஷனல் கட்டிடத்தின் 5-வது மாடியில் கடந்த 9-ந் தேதி கிக் பாக்சிங் கர்நாடகா என்ற பெயரில் குத்து சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில், மைசூரு மாவட்ட பிரிவில் இருந்து நிகில் கலந்து கொண்டார்.

அவருடன் பயிற்சியாளர் கிரண், விக்ரம் உள்ளிட்டோரும் மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்தார்கள். அன்றைய தினம்(கடந்த 9-ந் தேதி) நடந்த போட்டிகளில் மற்ற வீரர்கள் மட்டுமே மோதினார்கள். மறுநாள்(கடந்த 10-ந் தேதி) நடந்த குத்து சண்டை போட்டியில் நிகில் கலந்து கொண்டார். அப்போது நிகிலும், மற்றொரு வீரரும் மோதினார்கள். அப்போது எதிராளியான அந்த வீரர், நிகில் முகத்தில் ஒரு குத்து விட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதனால் நிகில் சுருண்டு கீழே விழுந்தார். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. மயக்கம் அடைந்த அவரை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கடந்த 2 நாட்களாக சுயநினைவை இழந்த நிலையில் நிகில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நிகில் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடலை பார்த்து சுரேஷ், அவரது மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள். பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார்.

அதில் போட்டியை ஏற்பாடு செய்திருந்த நவீன் ரவிசங்கர் மீது குற்றச்சாட்டு கூறியிருந்தார். அதன்பேரில், நவீன் ரவிசங்கர் மீது ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோ வெளியாகி பரபரப்பு

இதற்கிடையே போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த நவீன் ரவிசங்கர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த நிலையில் குத்து சண்டை போட்டியின் போது நிகிலை எதிராளி முகத்தில் குத்துவது மற்றும் அவர் கீழே சரிந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்