உடலை வைத்து அரசியல்... மத்திய குழுவுக்கு மேற்கு வங்காள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கண்டனம்

உடலை வைத்து அரசியல் செய்கிறது என்று மத்திய குழுவுக்கு மேற்கு வங்காள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Update: 2023-04-23 08:11 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் கலியகஞ்ச் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த 20-ந்தேதி டியூசனுக்கு படிக்க சென்றார். 17 வயதுடைய அந்த மாணவி அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால், எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுமி மாயமானது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளி கிழமை காலையில் கலியகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலில் இருந்த துணிகள் கிழிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்தனர். அதே பகுதியை சேர்ந்த ஜாவித் அக்தர் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை பிரேத பரிசோதனைக்கு உடலை தரமாட்டோம் என சிறுமியின் குடும்பத்தினர், பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை போலீசார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவு வெளிவந்து உள்ளது. இதன்படி, சிறுமியின் உடலில், பாலியல் துன்புறுத்தல் நடந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை என மேற்கு வங்காள போலீசார் இன்று கூறியுள்ளனர். விஷம் கொடுக்கப்பட்டு, அதனால் மரணம் ஏற்பட்டு உள்ளது என அந்த டீன்-ஏஜ் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த விசயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து, பிரேத பரிசோதனையை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மொத்த நடைமுறையும் வீடியோ பதிவும் செய்யப்பட்டது என போலீசார் கூறியுள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்ததும், மேற்கு வங்காள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (டபிள்யூ.பி.சி.பி.சி.ஆர்.) அதன் மத்திய குழுவை கடுமையாக சாடியுள்ளது. குழந்தைகளின் இறந்த உடல்களை வைத்து அரசியல் செய்கிறது. மேற்கு வங்காளத்தின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் சட்டவிதிகளை மீறியுள்ளது என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி மேற்கு வங்காள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சுதேஷ்னா ராய் இன்று காலை சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் சென்றார். சம்பவம் பற்றிய தகவல்களை சேகரித்து உள்ளார்.

இதேபோன்று, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோவும் நேற்று காலை கொல்கத்தா நகருக்கு நேற்று சென்று, போலீசார் இந்த விவகாரத்தில் உணர்வுபூர்வமுடன் செயலாற்ற வேண்டும் எனவும், சட்டம் மற்றும் ஒழுங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

இதுபற்றி நடந்த விசாரணையில், மகன் மற்றும் தந்தை என 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரும், மேற்கு வங்காள டி.ஜி.பி.க்கு இந்த விசயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்றும் முறையான மற்றும் சரியான நேரத்தில் விசாரணையை நடத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கடிதம் எழுதி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்