சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு; பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் 2 இடங்களில் முற்றுகை போராட்டம்
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து 2 இடங்களில் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:
சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு
பெங்களூரு- மைசூரு இடையே ரூ.8,480 கோடியில் விரைவுச்சாலை நிறுவப்பட்டுள்ளது. அதன் இருபுறத்திலும் தலா 2 வழிச்சாலை சர்வீஸ் சாலையாக விடப்பட்டுள்ளது. அந்த சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் கிடையாது. இந்த விரைவுச்சாலையை பிரதமர் மோடி கடந்த 12-ந் தேதி தொடங்கி வைத்தார். அந்த சாலையில் இன்னும் 30 சதவீத பணிகள் முடிக்கப்பட வேண்டியுள்ளது. அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் நேற்று முதல் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இதை கண்டித்து போராட்டம் நடத்துவதாகவும் அந்த அமைப்புகள் அறிவித்தன. இதையடுத்து ராமநகரில் உள்ள சுங்கச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடும் வாக்குவாதம்
இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் பிடதி அருகே அமைந்துள்ள சுங்கச்சாவடியில் காங்கிரசார் மற்றும் கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த விரைவுச்சாலையில் இன்னும் சில பகுதிகளில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சுங்க கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கூறினர்.
அப்போது அவர்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்று வேனில் ஏற்றி சென்றனர். அப்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பால் கேன்களுடன் போராட்டம்
அதே போல் கனமினகி கிராமம் அருகே அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே கன்னட அமைப்பினர் அதாவது கர்நாடக ஜனபர வேதிகே, நவ நிர்மாண வேதிகே, ஜன சைன்ய வேதிகே, கன்னடகரு ரக்ஷணா வேதிகே, கருநாடு சேனே அமைப்பினர், விவசாயிகள் ஒன்றுகூடி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் பால் கேன்களுடன் சுங்கச்சாவடியில் அமர்ந்து சுங்கச்சாவடிக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். அவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். பெங்களூருவில் இருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சுங்கச்சாவடியும், மைசூரு அருகே ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டணம்
இந்த விரைவுச்சாலையை பயன்படுத்தும் கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணமாக (55 கிலோ மீட்டர்) ரூ.135, பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ரூ.460, மிக கனரக வாகனங்கள் ரூ.750 முதல் ரூ.900 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடியில் கட்டணத்தை செலுத்திய வாகன ஓட்டிகள், கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு காரில் செல்பவர்கள் ஒரு வழி கட்டணமாக ரூ.270 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பு
கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தாலும், முதல் முறையாக இந்த சாலையில் சுங்க கட்டணம் வசூலித்ததாலும் சுங்கச்சாவடிகளில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.