'திரிபுராவில் பணபலத்தால் பா.ஜ.க. வென்றுள்ளது' - இடது முன்னணி சாடல்
ஆட்சி அதிகாரம் மற்றும் மத்திய அரசை தவறாகப் பயன்படுத்தி தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக இடது முன்னணி சாடியுள்ளது.
அகர்தலா,
திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் பணபலம், ஆட்சி அதிகாரம் மற்றும் மத்திய அரசை தவறாகப் பயன்படுத்தி தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக இடது முன்னணி சாடியுள்ளது.
இதுதொடர்பாக இடது முன்னணி ஒருங்கிணைப்பாளர் நாராயண் கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "மாநிலத்தில் 5 ஆண்டுகால பா.ஜ.க. அரசின் ஒடுக்குமுறை, நிர்வாக ஒழுங்கின்மையை இந்த தேர்தல் முடிவு பிரதிபலிக்கவில்லை.
ஜனநாயக உணர்வு சிறிதும் இல்லாத சூழலில், சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்திருந்தது, அரசியல் வன்முறை அன்றாட விஷயமாகி இருந்தது. இதனால் மக்களின் வாழ்க்கை பலமுனை பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. பெருமளவு பணத்தைக் கொட்டி வாக்குகளை வாங்கித்தான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது" என தெரிவித்துள்ளார்.
திரிபுரா காங்கிரஸ் கட்சித் தலைவர் பிர்ஜித் சின்கா, "வாக்காளர்களின் உண்மையான மனநிலையை தேர்தல் முடிவு வெளிக்காட்டவில்லை. பணம் மற்றும் அதிகார சக்தியால் மக்களை பா.ஜ.க. ஏமாற்றியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றதுமே பா.ஜ.க.வினர் வன்முறையில் இறங்கிவிட்டனர். அதனால், எதிர்க்கட்சிகளின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.