நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி - எடியூரப்பா

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைக்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-08 19:41 GMT

கோப்புப்படம்

பெங்களூரு,

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவருமான தேவேகவுடா நேற்று முன்தினம் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கர்நாடகத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேசியுள்ளார். ஜனதா தளம் (எஸ்) கட்சி 4 தொகுதிகளை கேட்டுள்ளது. இதற்கு அமித்ஷா ஒப்புக்கொண்டுள்ளார். அந்த தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடும். இதுகுறித்து எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். இதுகுறித்து பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு தேவேகவுடா, குமாரசாமியை நேரில் சந்தித்து பேசுவேன். நாங்கள் ஒற்றுமையாக நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். இதனால் நாங்கள் 25 முதல் 26 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அரசியலில் எதிர் அணியில் இருந்த கட்சிகள் கூட்டணி அமைப்பது சகஜம். இதை தவிர்க்க முடியாது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்