கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நம்பிக்கை
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளாா்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நல்ல எதிர்காலம்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல் கட்டமாக 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்புக்கு எந்த எதிர்பும் எழவில்லை. அதிருப்தியில் உள்ளவர்களிடம் நாங்கள் பேசி அவர்களை சமாதானப்படுத்தும் பணியையும் செய்து வருகிறோம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளோம்.
லட்சுமண் சவதிக்கும், எனக்கும் இடையே உணர்வு பூர்வமான உறவு உள்ளது. நான் அவருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். அவர் கஷ்டத்தில் இருந்தபோது, அவரை கட்சி காப்பாற்றியது. வரும் நாட்களில் அவரை கட்சி காப்பாற்றும் பணியை செய்யும். அவரது கவுரவத்தை காப்பாற்ற ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். அவருக்கு வரும் நாட்களில் நல்ல எதிர்காலம் உள்ளது.
முழு பெரும்பான்மை
நான் பா.ஜனதாவுக்கு வருவதற்கு முன்பு காங்கிரசில் சேர திட்டமிட்டு இருந்ததாக லட்சுமண் சவதி கூறியுள்ளார். இது தவறு. நான் வீட்டில் இருந்தபோது, பா.ஜனதா தலைவர்கள் எடியூரப்பா, அனந்தகுமார், சி.சி.பட்டீல், லட்சுமண் சவதி ஆகியோர் என்னை சந்திக்க வந்தது உண்மை தான். ஆனால் நான் காங்கிசில் சேரும் திட்டத்தில் இருக்கவில்லை. சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.