தேர்தல் நெருங்கி வருவதால் பொய்களை பரப்பும் பழைய யுக்தியை பாஜக கையாளுகிறது - ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
குஜராத் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல்கள் நெருங்கி வருவதால் பொய்களை பரப்பும் யுக்தியை பாஜக கையாண்டு வருவதாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
குஜராத் மற்றும் டெல்லியில் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பொய்களை பரப்பும் பழைய யுக்தியை பாஜக கையாண்டு வருவதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பொய்களை பரப்பும் பழைய யுக்தியை பாஜக கையாண்டு வருகிறது. பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு, அவர்கள் குமார் விஸ்வாசை அழைத்து வந்து, கெஜ்ரிவாலுக்கு சமூக விரோத சக்திகளுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டினார்கள். இப்போது, அதே தந்திரத்தை மீண்டும் கையாள சுகேஷ் சந்திரசேகர் போன்ற சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உதவியை அவர்கள் பெறுகிறார்கள்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக யாரையும் எதையும் சொல்ல வைக்கும். சுகேஷ் சந்திரசேகர் போன்றவர்கள் மூலம் எவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர், ஆனால் அதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுகேஷ் சந்திரசேகர், ரூ.200 கோடி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு எழுதிய கடிதத்தில், சிறையில் பாதுகாப்பாக இருப்பதற்காக டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடியும் கொடுத்தாக கூறியிருந்தார்.
மேலும், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை சந்தித்ததாகவும், தென் மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஏற்பாடு செய்யுமாறு கூறியதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சந்திரசேகர் கூறியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.