முதல்-மந்திரி பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலக கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-26 08:31 GMT

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21ம் தேதி இரவு கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை மறுநாள் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, கெஜ்ரிவாலை 6 நாட்கள் (28ம் தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லம் நோக்கி இன்று காலை பேரணியாக செல்வது என ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இதனால் பிரதமர் இல்லம் நோக்கி செல்ல கூடிய வழியில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்-மந்திரி பதவி விலக கோரி டெல்லியில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இருந்து டெல்லி தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்று கவர்னரிடம் இதுதொடர்பாக புகார் அளிக்க உள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஹர்ஷ்வர்தன் கூறுகையில், "டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். எனவே, அவர் தனது பதிவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு ஒருவரிடம் தனது பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவிடம் புகார் அளித்துள்ளேன் " என்றார்.

முன்னதாக அமலாக்கத்துறை காவலில் இருந்தபடி அரவிந்த் கெஜ்ரிவால் 2 உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்