மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க., எம்.வி.ஏ. கட்சிகள் தலா மூன்று இடங்களில் வெற்றி
மராட்டிய மாநிலத்தில் பாஜக மற்றும் மகா விகாஸ் அகாடி(எம்.வி.ஏ) ஆகிய கட்சிகள் தலா மூன்று இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.
மும்பை,
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 57 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு 10-ந்தேதி (நேற்று) தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, மத்தியபிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கார், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர்.
மீதமுள்ள கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
மராட்டிய மாநில மாநிலங்களவை எம்.பி. தோ்தலில் சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், சஞ்சய் பவாரும், காங்கிரஸ் சார்பில் இம்ரான் பிரதாப் கார்கியும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் படேலும் போட்டியிட்டனர். பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி பியூஸ் கோயல், அனில்போன்டே, தனஞ்செய் மகாதிக் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். 6 பேரை தேர்வு செய்ய 7 பேர் களத்தில் இருந்தனர்.
இதில் சஞ்சய் ராவத், இம்ரான் பிரதாப்கார்கி, பிரபுல் படேல், ஆகியோரை வெற்றி பெற வைக்க ஆளும் கூட்டணிக்கும், பியூஷ் கோயல், அனில் போன்டேயை வெற்றி பெற செய்ய பா.ஜனதாவுக்கும் போதுமான எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தது.
ஆனால் 6-வது எம்.பி.யை வெற்றி பெற வைக்க ஆளுங்கட்சிகள், பா.ஜனதா ஆகிய 2 தரப்பிற்கும் போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லை. அவர்களுக்கு 6-வது எம்.பி.யை வெற்றி பெற வைக்க சுயேச்சை, சிறிய கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே பா.ஜனதா ஒரு வேட்பாளரை திரும்ப பெற வேண்டும் என ஆளுங்கட்சிகள் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.
இதன் காரணமாக மராட்டிய சட்டசபையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வாக்குப்பதிவு உறுதியானது. இந்த 6-வது இடத்தில் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் பவார், பா.ஜனதாவை சேர்ந்த தனஞ்செய் மகாதிக் ஆகியோர் மோதினர்.
இதனால் ஆளுங்கட்சிகள் மற்றும் பா.ஜனதாவினர் சிறிய கட்சிகள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற யூகங்கள் வகுத்ததால் கடந்த சில நாட்களாக மராட்டிய அரசியலில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் மகா விகாஸ் அகாடி(எம்.வி.ஏ) ஆகிய கட்சிகள் தலா மூன்று இடங்களில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட மத்திய மந்திரி பியூஸ் கோயல், அனில்போன்டே, தனஞ்செய் மகாதிக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இம்ரான் பிரதாப் கார்கியும், சிவசேனா சார்பில் போட்டியிட்ட சஞ்சய் ராவத்தும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரபுல் படேலும் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.