டெல்லியில் பாஜக நடத்திய போட்டி சட்டசபை
டெல்லியில் பாஜக எம்.எல்.ஏக்கள் இன்று போட்டி சட்டசபையை நடத்தினார்கள்.
புதுடெல்லி,
டெல்லி சட்டசபையின் ஒருநாள் சிறப்பு அமர்வு நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சிறப்பு கூட்டத்தொடரை வீடியோ எடுத்ததாக கூறி 8 பாஜக எம்.எல்.ஏக்கள் நாள் முழுவதும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏக்கள் இன்று போட்டி சட்டசபையை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்கள் போல பாஜக எம்.எல்.ஏக்கள் முகமூடி அணிந்து கொண்டு வந்தனர். இதில், மதுபான முறைகேடு புகார் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
மதுபான முறைகேடு புகார் தொடர்பாக, துணைநிலை கவர்னர் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த பிறகு டெல்லி அரசு தனது கலால் கொள்கையை ஏன் திரும்ப பெற்றது என கேள்வி எழுப்பினார்கள். இந்த அரசாங்கம் கிழக்கு டெல்லியில் ஒரு பள்ளியையோ, மருத்துவமனையையோ திறக்கவில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் மதுக்கடைகளை திறந்துள்ளன" என்று ரோஹ்தாஸ் நகர் எம்.எல்.ஏ ஜிதேந்திர மகாஜன் குற்றம் சாட்டினார்.
புதிய கலால் கொள்கை மூலம் ரூ.9 ஆயிரத்து,500 கோடி வருவாய் கிடைக்கும் என சிசோடியா கூறினார். ஆனால் கடந்த ஆட்சியில் கிடைத்த ரூ.6 ஆயிரம் கோடி கூட கிடைக்கவில்லை என எதிர்க்கட்சி கொறடா அஜய் மஹாவர் கூறினார்.