பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து

பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று லோக் அயுக்தா போலீசார் கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளனர்.

Update: 2023-03-11 20:25 GMT

பெங்களூரு:-

எம்.எல்.ஏ. மகன் கைது

தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். இவர், அரசு அதிகாரி ஆவார். கடந்த 2-ந் தேதி டெண்டர் விவகாரம் தொடர்பாக ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லோக் அயுக்தா போலீசாரால் பிரசாந்த் கைது செய்யப்பட்டார். அவரது வீடுகளில் நடந்த சோதனையில் ரூ.7.72 கோடி சிக்கி இருந்தது.

இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் மாடால் விருபாக்ஷப்பாவிடமும் லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். அவர் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுள்ளதால் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துள்ளனர்.

அமலாக்கத்துறைக்கு கடிதம்

இந்த நிலையில், மாடால் விருபாக்ஷப்பா, அவரது மகன் பிரசாந்த் தனக்கு சொந்தமான பாக்கு தோட்டங்கள், தொழிற்சாலை மூலமாக சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை பாக்கு தொழிற்சாலை மூலமாக சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கவில்லை என்று கணக்கு காட்டி இருப்பதும் லோக் அயுக்தா போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அரசு அதிகாரியான பிரசாந்த் சட்டவிரோத பண பரிமாற்றம், வருமானத்தை மீறி சொத்து சேர்த்தது குறித்து உரிய விசாரணை நடத்தும்படி கோரி அமலாக்கத்துறைக்கு பரிந்துரை செய்து லோக் அயுக்தா போலீசார் கடிதம் எழுதிஉள்ளனர். இதன் காரணமாக பிரசாந்த் அமலாக்கத்துறை விசாரணையையும் எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்