சித்தராமையா குறித்து அவதூறு கருத்து: பா.ஜனதா பெண் நிர்வாகி கைது
முதல்-மந்திரி சித்தராமையா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பா.ஜனதா பெண் நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே தனியார் பாராமெடிக்கல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் மாணவிகளின் கழிவறையில் செல்போன் கேமராவை வைத்து ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் சக மாணவிகள் பதிவிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 3 மாணவிகளும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்களது செல்போன்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், பா.ஜனதா பெண் நிர்வாகி சகுந்தலா என்பவர் காங்கிரஸ் கட்சியையும், முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறாக பேசி இருந்தார். இதுதொடர்பான கருத்து ஒன்றையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முதல்-மந்திரியை அவதூறாக பேசியதாக கூறி பெங்களூரு ஐகிரவுண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் சகுந்தலாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.