கர்நாடகத்திற்கு அரிசி வழங்குவதில் அரசியல் செய்யும் பா.ஜனதா; முதல்-மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகத்திற்கு அரிசி வழங்குவதில் பா.ஜனதாவினர் அரசியல் செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அரிசி வழங்க இயலாது
மின் கட்டண உயர்வை கண்டித்து கர்நாடக தொழில் வர்த்தக சபையினர் முழு அடைப்பு நடத்துவதாக கூறியுள்ளனர். 2 மாத நிலுவைத்தொகையுடன் இந்த மாத கட்டணம் வந்துள்ளது. அதனால் கட்டணம் கூடுதலாக இருப்பது போல் தெரிகிறது. அடுத்த மாதம் முதல் கட்டணம் குறைவாக தான் வரும். இதுகுறித்து அந்த சபையினரை அழைத்து அதிகாரிகள் பேசியுள்ளனர். அவர்கள் சமாதானம் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்குகிறோம். இதற்கு தேவையான அரிசியை வழங்குமாறு இந்திய உணவு கழகத்திடம் கேட்டோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அடுத்த நாளே தங்களால் அரிசி வழங்க இயலாது என்று கூறி கடந்த 12-ந் தேதி அரசுக்கு கடிதம் எழுதினர்.
ஏழைகளுக்கான திட்டம்
முதலில் அரிசி இருப்பதாக கூறிவிட்டு பிறகு இல்லை என்று கூறுவதை என்னவென்று புரிந்து கொள்வது?. அவர்கள் அரிசி கொடுப்பதாக கூறியதால் தான் நாங்கள் மத்திய மந்திரியிடம் பேசவில்லை. ஒருவேளை இல்லை என்று கூறி இருந்தால், நான் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியிடம் பேசி இருப்பேன். இது ஏழைகளுக்காக அமல்படுத்தப்படும் திட்டம். இதற்கு குறுக்கீடு செய்வது ஏன்?.
நான் 21-ந் தேதி டெல்லி செல்கிறேன். அந்த நேரத்தில் பிரதமர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். அதனால் அவரை சந்திக்கும் திட்டம் இல்லை. அவர் டெல்லி திரும்பிய பிறகு வேறொரு நாளில் நேரில் சந்தித்து பேசுவேன். தெலுங்கானா முதல்-மந்திரியிடம் பேசினேன். அவர் தங்களிடம் அரிசி இல்லை என்று கூறிவிட்டார். சத்தீஸ்கர் மாநிலம் 1½ லட்சம் டன் அரிசி கொடுப்பதாக கூறியுள்ளது. ஆந்திராவிடமும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
அரசியல் செய்கிறார்கள்
கர்நாடகத்தில் அரிசி கொள்முதல் செய்ய வேண்டுமெனில் அதன் விலை அதிகமாக உள்ளது. ராய்ச்சூரில் தான் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு ஒரு கிலோ அரிசி ரூ.55 ஆகும். இந்த விலை அதிகம். மத்திய அரசு ஒரு கிலோ அரிசி ரூ.36-க்கு வழங்குகிறது. அரிசி வழங்குவதில் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் மத்திய அரசிடம் பேசி கர்நாடகத்திற்கு தேவையான அரிசியை ஒதுக்குமாறு சொல்ல வேண்டும். அதை விடுத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.