கர்நாடகத்தில் பா.ஜனதா பொய்களை உருவாக்கும் தொழிற்சாலை; காங்கிரஸ் விமர்சனம்
கர்நாடகத்தில் பா.ஜனதா பொய்களை உருவாக்கும் தொழிற்சாலை என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், முன்னாள் மந்திரியுமான பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
உத்தர கன்னடாவில் பரேஸ் மேத்தா என்ற இளைஞர் கடந்த 2017-ம் ஆண்டு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உயிரிழந்தார். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அந்த விசாரணை அமைப்பு, கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், அவர் கொலை செய்யப்படவில்லை என்று கூறியது. அதாவது இது மதக்கலவரத்தால் நடந்த கொலை அல்ல என்று கூறியுள்ளனர். இதன் மூலம் பா.ஜனதா பொய்களை உருவாக்கும் தொழிற்சாலை என்பது மக்களுக்கு தெளிவாக புரிந்துள்ளது. இந்த பொய் தொழிற்சாலையால் மாநிலத்தில் தீ பற்றி எரிகிறது. அத்துடன் நமது இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிறது. பா.ஜனதா தலைவர்கள் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள். பா.ஜனதா தனது அரசியல் நோக்கங்களுக்காக இளைஞர்களை தவறாக பயன்படுத்துகிறது. எங்களுக்கு எங்கள் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் தலைமை மீது நம்பிக்கை உள்ளது. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு கர்நாடகத்தில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி பலம் அடைந்துள்ளது.
இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.