'கேரளாவில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது' - காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
இந்துத்துவா, இந்தி அடிப்படையிலான வேண்டுகோள்களுக்கு கேரள மக்கள் ஆதரவு அளிப்பதில்லை என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "கேரள மாநிலத்தை மத்திய பா.ஜ.க. அரசு ஒருபோதும் புறக்கணிக்காது. கேரளாவில் பா.ஜக. கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்கு நாள்தோறும் உழைத்து வருகிறோம்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கேரள மக்கள் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அளித்தார்கள். 2024 மக்களவை தேர்தலில் இரட்டை இலக்க வெற்றியை அளிப்பார்கள்" என்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சு குறித்து திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறுகையில், "கேரளாவில் ஒரு தொகுதியில்கூட பா.ஜ.க. வெற்றி பெறாது. கேரளாவில் பா.ஜ.க.வின் அடித்தளம் மிகவும் சிறியது. இந்துத்துவா, இந்தி, இந்து, இந்துஸ்தான் அடிப்படையிலான அவர்களின் வேண்டுகோள்களுக்கு கேரள மக்கள் ஆதரவு அளிப்பதில்லை" என்று தெரிவித்துள்ளார்.